கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா |
ஒன்பதாம் திருமுறை |
1. கோயில் |
பண் - பஞ்சமம் |
195
மின்னார் உருவம் மேல்விளங்க
வெண்கொடி மாளி கைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்றுவந்து
நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டுபாடும்
தென்தில்லை அம்ப லத்துள்
என்னார் அமுதை எங்கள்
கோவை என்றுகொல் எய்துவதே? |
1 |
196
ஓவா முத்தீ அஞ்சுவேள்வி
ஆறங்க நான்ம றையோர்
ஆவே படுப்பார் அந்தணாளர்
ஆகுதி வேட்டுயர் வார்
மூவா யிரவர் தங்களோடு
முன் அரங்(கு) ஏறிநின்ற
கோவே உன்றன் கூத்துக்காணக்
கூடுவ தென்று கொலோ. |
2 |
197
முத்தீ யாளர் நான்மறையர்
மூவா யிர வர்நின்னோ(டு)
ஒத்தே வாழும் தன்மையாளர்
ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டுபாடும்
தென்தில்லை அம்ப லத்துள்
அத்தா உன்றன் ஆடல்காண
அணைவதும் என்று கொலோ? |
3 |
198
மானைப் புரையும் மடமென்
நோக்கி மாமலை யாளோடும்
ஆனைஞ் சாடும் சென்னிமேலோர்
அம்புலி சூடும் அரன்
தேனைப் பாலைத் தில்லைமல்கு
செம்பொனின் அம்ப லத்துக்
கோனை ஞானக் கொழுந்துதன்னைக்
கூடுவது என்று கொலோ? |
4 |
199
களிவான் உலகில் கங்கைநங்கை
காதலனே! அரு ளென்(று)
ஒளிமால் முன்னே வரங்கிடக்க
உன்னடி யார்க்(கு) அருளும்
தெளிவார் அமுதே! தில்லைமல்கு
செம்பொனின் அம்ப லத்துள்
ஒளிவான் சுடரே! உன்னைநாயேன்
உறுவதும் என்று கொலோ? |
5 |
200
பாரோர் முழுதும் வந்திறைஞ்சப்
பதஞ்சலிக்(கு) ஆட்டு கந்தான்
வாரார் முலையாள் மங்கைபங்கன்
மாமறை யோர் வணங்கச்
சீரான் மல்கு தில்லைச்செம்பொன்
அம்பலத்(து) ஆடு கின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக்
காண்பதும் என்று கொலோ? |
6 |
201
இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன்
இருபது தோளும் இற
மலைதான் எடுத்த மற்றவற்கு
வாளொடு நாள் கொடுத்தான்
சிலையால் புரமூன்(று) எய்தவில்வி
செம்பொனின் அம்ப லத்துக்
கலையார் மறிபொன் கையினானைக்
காண்பதும் என்று கொலோ? |
7 |
202
வெங்கோல் வேந்தன் தென்னன்நாடும்
ஈழமும் கொண்ட திறல்
செங்கோற் சோழன் கோழிவேந்தன்
செம்பியன் பொன்ன ணிந்த
அங்கோல் வளையார் பாடியாடும்
அணிதில்லை அம்ப லத்துள்
எங்கோன் ஈசன் எம்மிறையை
என்று கொல் எய்துவதே. |
8 |
203
நெடுயா னோடு நான்முகனும்
வான வரும் நெருங்கி
முடியான் முடிகள் மோதிஉக்க
முழுமணி யின் திரளை
அடியார் அலகி னால்திரட்டும்
அணிதில்லை அம்ப லத்துக்
கடியார் கொன்றை மாலையானைக்
காண்பதும் என்று கொலோ? |
9 |
204
சீரான்மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாழி தன்னைக்
காரார் சோலைக் கோழிவேந்தன்
தஞ்சையர் கோன் கலந்த
ஆரா இன்சொற் கண்டராதித்தன்
அருந்தமிழ் மாலை வல்லார்
பேரா வுலகிற் பெருமையோடும்
பேரின்பம் எய்து வரே. |
10 |
திருச்சிற்றம்பலம் |